சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், பணியைத் துவக்க மாநில அரசு தயாராகி விட்டது. தமிழகத்தில் தற்போதுள்ள நிர்வாக எல்லைகள் மற்றும் அலகுகளை முடக்கிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, புதிய மாவட்டங்கள், தாலுகாக்கள், நகராட்சி, கிராமங்கள், போலீஸ் நிலையங்கள், ஒன்றியங்கள், உபகோட்டங்கள் உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் 2011ம் ஆண்டு, நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசு கடந்த மே மாதம் 13ம் தேதி உத்தரவிட்டது. மத்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் சென்சஸ் கமிஷனர், பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே, 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் சோதனை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பிரதான கணக்கெடுப்புப் பணியின் முதல் கட்டப் பணி, நாடு முழுவதும் வரும் 2010 ஏப்ரல் மாதம் துவங்கும். அதாவது, வீடுகள் மற்றும் குடியிருப்புகளை பட்டியலிடும் பணி துவக்கப்படும்.
இதன்பின், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி, வரும் 2011 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும். இந்த கணக்கெடுப்புப் பணி முழுமையாக அனைத்து பகுதிகளும் அடங்கும் வகையில், அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாக அமைப்புகளுக்கு உட்பட்டு, நாடு பல்வேறு சிறு கணக்கெடுப்பு ஒன்றியங்களாக பிரிக்கப்படும்.இவ்வாறு கணக்கெடுப்பு ஒன்றியங்களில் எல்லைகளை குறியிடும் பணி, வீடுகளை பட்டியலிடும் பணிக்கு முன்னதாக துவக்கப்படும். அவை, மக்கள் தொகை வரைபடத்தில் குறியிடப்படும். இதன்மூலம், ஒரே பகுதி வெவ்வேறு இடங்களில் இடம்பெறுவது அல்லது விடுபடுவது தவிர்க்கப்படும்.எனவே, கணக்கெடுப்பு ஒன்றியங்களை குறியிட்ட பின், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி முடியும் வரை, நிர்வாக அமைப்புகளில் எவ்வித மாற்றமும் இருக்கக் கூடாது.
எனவே, தற்போதுள்ள நிர்வாக அமைப்புகளில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றால், அதை 2010 ஜனவரி முதல் தேதிக்குள் செய்து கொள்ள வேண்டுமென, சென்சஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.எனவே, தற்போதுள்ள நகராட்சிகள், வருவாய் கிராமங்கள், தாலுகாக்கள், போலீஸ் ஸ்டேஷன்கள், ஒன்றியங்கள், உபகோட்டங்கள், மாவட்டங்கள் போன்றவற்றின் எல்லைகளை மாற்றியமைக்கும் திட்டங்கள் ஏதாவது இருந்தால், அதை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.அவ்வாறு செய்யப்படும் மாற்றங்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகத்துக்கும், இந்திய பதிவாளர் ஜெனரலுக்கும், டிசம்பர் 31ம் தேதிக்குள் தெரிவிக்கப்பட வேண்டும். அதன்பின், நிர்வாக எல்லைகளில் எவ்வித மாறுதலும் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்று, தலைமைச் செயலர் ஸ்ரீபதி பிறப்பித்துள்ள உத்தரவில், "தற்போதுள்ள நிர்வாக அலகுகள், எல்லைகள் முடக்கப்படுகின்றன. மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்கள், போலீஸ் ஸ்டேஷன்கள், நகராட்சிகள், ஒன்றியங்கள், உபகோட்டங்கள் போன்றவற்றை புதிதாக உருவாக்க, 2010 ஜனவரி முதல் தேதியில் இருந்து 2011 மார்ச் 31ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.வருவாய் நிர்வாக ஆணையர், போலீஸ் டி.ஜி.பி., ஊரக வளர்ச்சித் துறை கமிஷனர், நகராட்சி நிர்வாக இயக்குனர், பேரூராட்சிகள் இயக்குனர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், பத்து மாநகராட்சிகளின் கமிஷனர்கள், அரசின் இந்த முடிவுக்கு கட்டுப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் எவ்வித மாற்றங்களும் செய்வதற்கான பரிந்துரைகளை அனுப்பக் கூடாது என்றும், தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்ட பணி ஆரம்பம் : மாவட்ட நிர்வாக எல்லைகளை மாற்ற அரசு தடை!
11/15/09
Labels:
India news.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment