http://i50.tinypic.com/29mlkww.jpg

ஓடும் வயிறும் ஓடர் கொத்துறொட்டியும்.

11/3/09



தலையங்கத்தைப் படித்ததும் ஏதோ ஓடருக்கு கொத்துறொட்டி செய்வோருக்கு எதிராக எழுதப்படுகிறது என்று எண்ணிவிடாதீர்கள். நீங்கள் படிப்பதற்கு உள்ளே வரவேண்டும் என்பதற்காக அத்தலையங்கம் போடப்பட்டது. ஏனென்றால் அதைவிட பாரதூரமான விடயங்களை இக்கட்டுரையில் சொல்ல வேண்டியிருக்கிறது.

சென்ற சில வாரங்களின் முன் திருமண வீடொன்று சென்று, அங்கு வழங்கப்பட்ட ஓடர் சாப்பாட்டை சாப்பிட்டு பதினெட்டு மணிநேரம் மயக்கநிலையில் கிடந்து, ஒருவாறு தப்பிப் பிழைத்ததும் இதை எழுத எண்ணியிருந்தேன். பின் சிறிய தயக்கத்தால் தாமதித்தேன், நேற்று ஒரு பிறந்தநாள் விழாவில் ஓடர் கொத்துறொட்டியை சாப்பிட்டு வயிற்றோட்டத்தில் சிக்குப்பட்ட பின்னர் இதை எழுதுவது நலமென நினைத்து எழுதுகிறேன்.

நாம் இப்போது வாழும் நாடு டென்மார்க் என்பதையும், இங்குள்ள பக்டீரியாக்களின் தன்மைகள் எவை என்பதையும் புரிந்து வாழாத காரணத்தால் பலவிதமான நோய்களை சந்திக்கிறோம். இலங்கையில் இருக்கும் உணவுக் கிருமிகளை எதிர்த்து வாழ்ந்த எமது உடம்பிற்கும் டென்மார்க்கில் கடந்த கால் நூற்றாண்டுகளாக வாழ்ந்த நமது உடம்பிற்கும் பாரிய வேறுபாடுண்டு. இதை உணரலாமல் ஓடர் உணவுகளையும், விழாக்களையும் நாம் ஊர்ப்பாணியில் சிந்தித்து ஏற்பாடு செய்து வருவதால் பலவிதமான நோய்களைச் சந்திக்கிறோம்.

தற்போது உலகம் முழுவதும் எச்1என்1 வைரஸ் மக்களின் உயிர்களை காவு கொண்டு வருகிறது. டென்மார்க்கில் உள்ள பொது இடங்களில் எல்லாம் எச்சரிக்கைத் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. கைகளை சுத்தமாகக் கழுவுங்கள், சுகாதார விதிகளை மிகமிக கவனமாகப் பேணுங்கள் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இன்றய உலகில் உயிராபத்தான பெரிய விடயம் துப்பாக்கிச் சூடோ, குண்டு வீச்சோ அல்ல தவறான உணவுதான். தவறான உணவுப் பொருள் உங்கள் வயிற்றில் போய்விட்டால் அவ்வளவுதான் பத்துவருடத்தில் மரணிக்கப்போகும் ஒரு மனித உடல் ஐந்து வருடங்கள் முன்னதாகவே மரணத்தைத் தேடிக் கொள்ளும். ஒவ்வொரு தடவை நீங்கள் தவறான உணவை உட்கொள்ளும் போதும் சுடலைக்கு போகும் நாளை விரைவுபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே பொருளாகும்.

சமீபத்தில் இதற்கான விசேட பயிற்சி வகுப்பு ஒன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு பக்டீரியாக்கள் எவ்வளவு மோசமானவை என்பதைக் கற்பித்தார்கள். அதைப் பார்த்த பின்னர் நமது சமையல் முறையில் இருக்கும் குறைபாடுகள் பலத்த அதிர்ச்சி தருவதாக இருந்தன. கழிப்பறைக்குள் சென்று வெளியே வரும்போது கண்டிப்பாக சவர்க்காரம் போட்டு கைகளை ஆழமாகக் கழுவவேண்டும். கழிவறை உட்பட குசினிவரை உள்ள கதவுகளின் கைபிடிகளில் உள்ள கொத்துக் கொத்தான பக்டீரியாக்கள் தேகத்தை நடுநடுங்க வைத்தன.

குளிர்சாதனப் பெட்டியில் உணவுப் பொருட்களை தனித்தனியாக மூடி வைக்காமல் திறந்து வைத்தால் ஒன்றில் இருக்கும் பக்டீரியா இன்னொன்றுக்கு வேகமாக எப்படிப் பறந்து போய் இன்னொரு புதிய பக்டீரியாவை உருவாக்கும் என்பதையும் அங்கு காண முடிந்தது. மேலும் வெங்காயம் வெட்டிய கத்தியை கழுவாமல் இறைச்சியை வெட்டினால் இரண்டிலும் உள்ள பக்டீரியாக்கள் எப்படி புதுமை பெறுகின்றன என்பதை எல்லாம் திரைப்படமாகக் காட்டினார்கள்.

சமையல் அறையில் பொருட்களை அடுக்க வேண்டிய முறை, உணவுப் பொருட்களை ஒன்றோடு ஒன்று கலந்து வைக்காத செயல் என்று ஏகப்பட்ட விடயங்கள் அதில் இருந்தன. மேலும் குளிர்சாதனப் பெட்டி, மைக்கிறோ அவண், அடுப்பின் வெப்பநிலை போன்ற விடயங்களில் எல்லாம் புதிய நடைமுறைகள் கைக்கொள்ளப் படாவிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். போதைவஸ்த்து, மதுபானம், புகைத்தல் போன்றவற்றால் அடையும் மரணத்தைவிட தவறான உணவு உருவாக்கம் வேகமான மரணத்தை உருவாக்கும் என்பது அந்தப் பயிற்சி வகுப்பின் உறுதியான கருத்தாக இருந்தது.

தவறான மருந்தைக் கொடுத்து மரணத்தைக் கொடுக்கும் சில வைத்தியர்களை விட ஆபத்தானவர் தவறான உணவைக் கொடுப்போர் என்று அந்த நிகழ்ச்சியில் பேசிய விஞ்ஞானி தெரிவித்தார். இன்று வெளிநாட்டவர் நடாத்தும் கடைகளையும், உணவகங்களையும் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பலமாக நோட்டம் விட்டு வருகிறார்கள். மலிவுவிலை உணவு காலாவதியாகும் நாளை நெருங்கிய பொருளில் உருவாக்கப்படுகிறது. பூஞ்சணம் புற்றுநோயை உருவாக்கிறது என்று கடைக்குக்கடை எச்சரித்து வருகிறார்கள்.

ஆகவேதான் உணவுப் பொருட்களை தயாரிப்பவர்கள் சமையல்கல்வி உதவியாளர் பாPட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்று கண்டிப்பாக எதிர் பார்க்கிறார்கள். உணவுக் கட்டுப்பாட்டாளர் சிரிக்கும் அடையாளம் போடாத உணவகங்களில் உணவைச் சாப்பிட வேண்டாம், அங்கு பொருட்களை வாங்க வேண்டாம் என்றும் கேட்கப்படுகிறார்கள்.

நமது தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் கடைகளின் விளம்பரங்களும், அங்கு உணவுப் பொருட்கள் அடுக்கப்பட்டிருக்கும் விதங்களையும் பார்த்தால் நமது ஆரம்பமே தவறு என்பது தெரியவரும். இப்படியான கடைகளில் மலிவுப் பொருட்களை வாங்கி, ஓடர் சமையல் செய்து இலாபம் பார்க்க நினைத்தால் அந்த எண்ணம் அதைவிட பெரிய தவறாகவே இருக்கும். அதற்காக ஓடர் சமையல் செய்வோர் எல்லாம் தவறு விடுகிறார்கள் என்று பொத்தாம் பொதுவில் கருதிவிடக்கூடாது. சமையல் செய்வோர் யார், அவர்களுடைய சமையற்கலை பின்புலம் என்ன போன்ற விடயங்களை அறியாமல் முகத்திற்கு அஞ்சி சாப்பிடக்கூடாது. சமைப்போரை விட சாப்பிடுவோரே குற்றவாளிகள், அவர்களுக்கே வயிற்றோட்ம் என்னும் தண்டனை கிடைக்கிறது.

சமீபத்தில் பேர்கர் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட இறைச்சி அடங்கிய பாரவண்டியொன்று கிழக்கு ஐரோப்பிய நாடொன்றில் சிக்குப்பட்டது. அதில் இருந்த இறைச்சி முழுவதும் இரண்டாவது உலக யுத்த காலத்திற்கு முன்னர் உறைபனியில் வைக்கப்பட்ட பழைய இறைச்சியாகும். அதை பேர்கராக்கி உண்போருக்கு இறைச்சியின் வரலாறு தெரியாது. அது உண்பருடைய வயிற்றில் ஊதப்படும் மரணச்சங்காகும்.

படிப்பைக் குழப்பி ஓடிய சிறுவன் ஒருவன் கோட்டலில் சர்வராக இருந்தான் என்றும், அழுக்குச் சாம்பாரால் தோய்ந்த துணியால் சாப்பாட்டு மேசையை துடைத்துவிட்டு வாழையிலையைப் போட்டான் என்றும் கூறுவது வெறும் கதையல்ல நிஜம். இன்றுகூட இலங்கையில் சாப்பிட்டதும் கை துடைக்க செய்திப் பத்திரிகையில் ஒரு துண்டை வெட்டி கொடுக்கிறார்கள். சாப்பாட்டுப் பார்சலை அதே பத்திரிகையால் கட்டுகிறார்கள். செய்திப் பத்திரிகையில் உள்ள அச்சடித்த மை நச்சுத்தன்மையானது. அதனால் கைகளை துடைப்பதோ, உணவுப் பொருட்களை கட்டுவதோ ஏறத்தாழ குற்றச் செயல்தான். இந்த செய்திப் பத்திரிகை சார் மனப்பான்மை இன்றும் நம்மிடையே மாறவில்லை.

கடந்த ஆண்டு புதிதாக ஓடர் சமையலை ஒருவர் செய்வதாகவும், அவருடைய சிறப்பே சிறப்பு என்றும் சிலர் பேசிக் கொண்டார்கள். அதுவுமல்லாமல் மலிவாகவும் செய்து கொடுப்பதாக விழாவை நடாத்தியவர் கூறிக்கொண்டார். அங்கே தமிழகத்தில் இருந்து கோட்டல் நடாத்திய ஓர் அப்பா வந்திருப்பதாகவும், அவருடைய பதம் மிகவும் சுவையானது என்றும் சிகரட்டும் கையுமாக குசினிக்குள் நின்ற இரண்டுபேர் பேசிக் கொண்டார்கள்.

அங்கே உயிரைக் குடிக்கும் இருபது லீட்டர் எண்ணெய்த்தகரம் இருந்தது. கத்தரிக்காய் வதக்கல் அந்த கொழுப்புக் கூடிய எண்ணெயில் மிதந்து கொண்டிருந்தது. நூறு பாகைக்கு மேல் சூடாக்கினால் எந்த எண்ணெயானாலும் முழுமையாக கொழுப்பை அடைந்துவிடும்போது, இந்த மோசமான எண்ணெயின் பாரதூரத்தை எண்ணவே பயமாக இருந்தது.

திடீரென அப்பளம் பொரிக்க தட்டில்லாமல் போகவே அந்த அப்பா வேகமாக கொன்ரேனரை நோக்கி ஓடினார். அங்கிருந்த காட்போட் பெட்டி ஒன்றை எடுத்துவந்து நிலத்தில் வைத்துவிட்டு அப்பளத்தையும், வற்றல் மிளகாயையும் பொரித்து அதில் போட்டுக் கொண்டிருந்தார். அந்தநேரம் ஒரு வயதான பெண்மணி வேகமாக வந்து, கரண்டியைக் காணாத காரணத்தால் கறியை கைகளால் அள்ளி சட்டியில் போட்டார். இது ஒரு கண்ணால் கண்ட நிகழ்வு. இதுபோல ஆயிரம் நிகழ்வுகள் உண்டு.

ஆகவே உணவை தயாரிப்பவர்கள் அதற்கான கல்வியையும், சான்றிதழையும் பெற்றிருப்பது அவசியம். ஆரோக்கிய உணவு, சுகாதாரம் சரியான முறையில் பேணப்படுதல், மலிவு விலை உணவுகளை சமையலில் சோர்க்காமை போன்ற கண்டிப்பான விடயங்களை சமையல் செய்வோர் பின்பற்ற வேண்டும். நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டோர் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அது குறித்த விஞ்ஞான வழிகாட்டல் தெரியாதவரிடம் மலிவு விலைக்கு உணவை ஏற்பாடு செய்து, சபை நடாத்த முற்படக்கூடாது. நம்மை நம்பி வரும் விருந்தினரை மரணக்குழிக்குள் வீழ்த்தக் கூடாது.

வருங்காலங்களில் விழாக்களுக்கு செல்வோர் குசினியையும், சமைக்கப்பட்ட முறையையும் பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டு சாப்பிடக் கூடாது. உணவுக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தினால் சிரிப்பு அடையாளமிடப்படாத இடத்தில் இருந்து வரும் உணவை சாப்பிடுவதாயின் கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வன்னி முகாமில் மக்களுடைய சுகாதாரம் பற்றி வாய் கிழியப் பேசும் பலர் அவர்கள் வாய்க்குள் கிடக்கும் உணவின் பாரதூரம்பற்றி பார்க்க மறந்துவிட்டார்கள் என்று நாளைய வரலாறு நம்மைப் பார்த்து சிரிக்காதவாறு நடப்பது அவசியம். பத்தாயிரம் குறோணரில் பட்டணிந்து, அறுபது பவுணில் தாலி கட்டி, காட்போட் பெட்டியில் அப்பளம் பொரித்துப் போட்டு, தமிழ் கலாச்சாரம் காப்பது சரியல்ல. நமது செயல்கள் அனைத்திலும் விஞ்ஞானம் இணைக்கப்பட வேண்டும். நவீன விஞ்ஞானம் சமையில் இருந்தே ஆரம்பிக்கிறது.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்..
அதுவரை நம்பிக்கைகளுடன் கி.செ.துரை. 02.11.09


0 comments

Post a Comment