நெல்லை: நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே நேற்று போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொல்லப்பட்டார். ஆள் மாறாட்டத்தில் அநியாயமாக சப்- இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொல்லப் பட்டிருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சப்- இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூரைச் சேர்ந்தவர். 1988-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்த இவர் அதிரடிப்படையில் திறம்பட பணியாற்றி வந்தார். பிறகு பதவி உயர்வு பெற்று ஆழ்வார்குறிச்சியில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் பணியாற்றி வந்தார். ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடையம் போலீஸ் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சிவசுப்பிரமணியம். இவரும் கொலையுண்ட வெற்றி வேலுவும் ஒரே உயரம் உடையவர்கள். இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வருபவர்கள். உண்மையில் கொலையாளிகள் குறி வைத்தது, கடையம் சப்- இன்ஸ்பெக்டர் சிவ சுப்பிரமணியத்துக்குத்தான். இவருக்கும் இவரது மனைவி சிவகாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
சிவகாமி வரதட்சணை புகார் கொடுத்ததால் சிவசுப்பிரமணியம் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. மனைவி மீது வெறுப்படைந்த சிவசுப்பிரமணியம் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இது சிவகாமியின் தந்தை ஆறுமுகம், சகோதரர் கந்தசாமி ஆகியோருக்கு கடும்கோபத்தை ஏற்படுத்தியது. சிவசுப்பிரமணியத்திடம் சமரசபேச்சு நடத்தினார்கள். ஆனால் மனைவி சிவகாமியை விட்டு பிரிவதில் சிவசுப்பிரமணியம் மிகவும் உறுதியாக இருந்தார். மனைவி குடும்பத்தினர் கொலை வெறியுடன் அலைவது சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்துக்கு தெரிய வந்தது. இதனால் அவர் வெளியில் செல்லும் போது உஷாராக இருந்தார். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை முழுமையாக மூடும் ஹெல்மெட் அணிந்தார்.
கடந்த சில மாதங்களாக சிவகாமி குடும்பத்தினர் கடையம், ஆழ்வார்குறிச்சி பகுதியில் நடமாடியதை அறிந்ததும், "என்னை கொன்று விடுவார்கள் போல் இருக்கிறது'' என்று சக ஊழியர்களிடம் கூறியபடி இருந்தார். சமீபத்தில் சிவசுப்பிரமணியம் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்தார். தற்போது அவர் சபரி மலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று சிவகாமி குடும்பத்தினருக்கு தவறான ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் பன்னீர்செல்வமும், மைதீன்கானும் அம்பாசமுத்திரம் வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம் மோட்டார்சைக்கிளில் வருகிறார் என்று கூறப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிவசுப்பிரமணியத்தை கொலை செய்துவிடலாம் என்றும் கூறப்பட்டது. இதை நம்பி சிவகாமி குடும்பத்தினர் தங்கள் ஆட்களை திரட்டி கொண்டு 3 மோட்டார்சைக்கிளில் வந்தனர். சிவசுப்பிரமணியம் சபரிமலைக்கு சென்று விட்டது தெரியாமல் கொலை வெறியுடன் ஆழ்வார்குறிச்சி அருகே பாலம் அருகில் உள்ள புதர் பகுதிகளில் பதுங்கி இருந்தனர். வெற்றிவேலை கண்டதும், பைக்கில் வருவது சிவசுப்பிரமணியம்தான் என்று கொலையாளிகள் நினைத்துவிட்டனர். மறுவினாடி சரமாரியாக குண்டுகளை எடுத்து வீசினார்கள். எதிர்பாராத இந்த தாக்குதலால் வெற்றிவேல் நிலைகுலைந்து மோட்டார்சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்தார். அப்போது அவர் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை கொலையாளிகள் வீசினார்கள். அந்த குண்டு வெடித்ததில் வெற்றி வேலின் வலது பக்க தொடை சிதைந்தது. அந்த கால் தனியாக துண்டித்து தொங்கியது. வெற்றிவேல் அலறித் துடித்தார். என்றாலும் கொலையாளிகள் விடவில்லை. அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்டினார்கள். ஒரு வெட்டு அவர் தலை பின்பக்கத்தில் ஆழமாக விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் கதறினார்.
அந்த சமயத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், மைதீன்கானும், வைரஸ் காய்ச்சல் பரவியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக அம்பாசமுத்திரத்தில் இருந்து கடையநல்லூருக்கு வந்து கொண்டிருந்தனர். வெற்றிவேலை சூழ்ந்து கொண்டு சிலர் அரிவாளால் வெட்டிக்கொண்டிருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். அமைச்சர்களின் காருக்கு முன்னால் வந்த போலீசார் வாகனங்களை நிறுத்தி விட்டு ஓடிவந்தனர். இதைப்பார்த்ததும் கொலையாளிகள் போலீசார் மீது 2 குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதற்கிடையே நடுரோட்டில் குற்றுயிரும் குலை உயிருமாக கிடந்த வெற்றிவேலுக்கு முதல் உதவி சிகிச்சை செய்தனர். அமைச்சருடன் வந்த டாக்டர் ஒருவர் வெற்றிவேல் உயிரைக் காப்பாற்ற போராடினார்.
ஆனால் வெட்டுக்கள் ஆழமாக விழுந்திருந்ததால் அதிக ரத்தம் வெளியேறி, வெற்றிவேல் பரிதாபமாக இறந்தார். அவரை கொன்ற வர்கள் யார் என்று போலீ சார் விசாரணை நடத்தினார்கள். சிறிது நேரத்தில் ஆள் மாறாட்டத்தில் வெற்றிவேல் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. கொலை நடந்த தகவல் அறிந்ததும் டெல்லி டி.ஐ.ஜி. கண்ணப்பன், போலீஸ் சூப்பிரண்டு அஷ்ரா கர்க் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு அஷ்ரா கர்க்கிற்கு மஞ்சப்புளி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் போனில் தொடர்பு கொண்டார். தங்கள் ஊரில் ஒரு மோட்டார்சைக்கிள் கேட்பாரற்று கிடப்பதாக கூறினார்.
உடனே போலீஸ் சூப்பிரண்டு அஷ்ராகர்க் தன் படையுடன் அங்கு விரைந்தார். மோட்டார்சைக்கிளில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தார். அப்போது அந்த மோட்டார் சைக்கிள் (டி.என். 72 எக்ஸ் 444) கொலையாளிகள் பயன்படுத்தியது என்பது தெரிந்தது. மோட்டார்சைக்கிள் கிடந்த இடத்தில் இருந்து 2 அரிவாள்கள், 3 நாட்டு வெடிகுண்டுகள், ஒரு பைப் வெடிகுண்டை போலீசார் கைப்பற்றினார்கள்.
அந்த மோட்டார்சைக்கிள் எண் மூலம் ஆய்வு நடந்தபோது அது ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள வெள்ளூரைச் சேர்ந்த கந்தசாமிக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இவர் சிவகாமியின் சகோதரர். இதன் மூலம் கொலையாளிகள் சிவகாமியின் உறவினர்கள்தான் என்பது உறுதிபடுத்தப்பட்டது. கொலையாளிகள் வந்த மற்றொரு மோட்டார்சைக் கிளை இன்று காலை போலீசார் கண்டுபிடித்தனர். மொத்தம் 6 பேர் வந்துள்ளனர். அவர்கள் யார், யார் என்று கண்டு பிடிக்க போலீசார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கொலையாளிகளை பிடிக்க நெல்லை மாவட்டத்தில் 4 தனிப்படைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தனிப்படை போலீசார் ஸ்ரீவைகுண்டம் சென்று கொலையாளிகளை சல்லடை போட்டு தேடினார்கள்.
அப்போது சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனின் மனைவி சிவகாமி வீட்டில் இருந்தார். அவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையாளிகள் மதுரை மற்றும் சென்னை தப்பி ஓடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்கள் ஏதாவது ஒரு கோர்ட்டில் சரண் அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதற்கிடையே சபரிமலை சென்றிருந்த சிவசுப்பிரமணியத்துடன் செல்போனில் தொடர்பு கொண்டு கொலை செய்ய நடந்த தாக்குதல் பற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவரை உடனடியாக திரும்பும் படியும் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து சிவசுப்பிரமணியன் சபரிமலை பயணத்தை ஒத்தி வைத்து விட்டு நெல்லை திரும்பினார். அவரிடம் டி.ஐ.ஜி. கண்ணப்பன், எஸ்.பி, அஸ்ரா கார்க் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரனை நடத்தினார்கள். அப்போதுதான் சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், தனக்கும், தனது மனைவி சிவகாமிக்கும் இடையில் நடந்த தகராறு குறித்து கூறினார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவியின் தம்பி கந்தசாமி கடையத்திற்கு வந்ததையும் கூறினார். இதைக் கேட்டு போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனை ஜாக்கிரதையாக பாதுகாப்புடன் இருக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். கொலையாளிகள் தலைமறைவாக உள்ளதால் அவர்களை பிடிக்கும் வரையில் சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆள் மாறாட்டத்தில் கொலையுண்ட எஸ்.ஐ! அதிர்ச்சி தகவல்
1/14/10
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment